search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎஸ்பி மன்னர் மன்னன்"

    குட்கா ஊழல் தொடர்பாக டி.எஸ்.பி. மன்னர் மன்னன் மற்றும் ஆய்வாளர் சம்பத் ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. #GutkhaScam #CBI
    சென்னை:

    தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பதற்கு போலீஸ் உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், கலால் வரித்துறை அதிகாரிகள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை, செங்குன்றம் அருகே குட்கா குடோன் நடத்தி வரும் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் சார்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மாதவராவ் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கிய 2 டைரிகள் மூலம் இந்த ஊழல் அம்பலத்துக்கு வந்தது.

    மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் இந்த ஊழல் பற்றிய விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திய பிறகு கடந்த 5-ந்தேதி டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வீடுகள் உள்பட 35 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் சில ஆவணங்கள் சிக்கின.

    இதைத் தொடர்ந்து மறுநாள் (6-ந்தேதி) குட்கா பங்குதாரர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் பி.செந்தில்முருகன், கலால் வரித்துறை அதிகாரி கே.கே.பாண்டியன் ஆகிய 5 பேரையும் சி.பி.ஐ. கைது செய்தது. அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதற்காக சி.பி.ஐ. கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று கைதான 5 பேரிடமும் 4 நாட்கள் விசாரணை நடத்த சி.பி.ஐ. கோர்ட்டு அனுமதி அளித்தது.

    இதையடுத்து கைதான 5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று காவலில் எடுத்து நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். கைதான 5 பேர் பற்றிய முழு தகவல்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே திரட்டி வைத்திருந்தனர். இதுவரை நடந்த விசாரணைகளின் மர்ம முடிச்சுகள் அனைத்தும் இந்த 5 பேரை சுற்றியே வந்திருப்பதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் அறிந்திருந்தனர்.

    இவற்றின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தயார் செய்திருந்தனர். நேற்று அந்த கேள்விகளைக் கேட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது லஞ்சப் பணம் யார்-யாருக்கு எப்படி கை மாறியது என்பது பற்றிய தகவல்கள் ஆதாரங்களுடன் கிடைத்தது.

    குட்கா ஊழலை நிரூபிப்பதற்கு தேவையான அளவுக்கு, அந்த ஆதாரங்கள், வாக்குமூல தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அடுத்தக்கட்ட விசாரணையை அவர்கள் தீவிரமாக நடத்த தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் கைதான 5 பேரிடமும் இன்று (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக விசாரணை நடந்து வருகிறது. இன்று நடந்த விசாரணையின் போது அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டது பற்றிய அதிரடி விசாரணை நடந்தது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தன்று ஒரு உயர் போலீஸ் அதிகாரிக்கு அந்த தரகர் மூலம் எப்படி லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.

    இந்த விசாரணையில் லஞ்சம் கை மாறியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் நேரடியாக லஞ்ச பணத்தை வாங்காமல், கீழ்மட்ட ஊழியர்களை பயன்படுத்தி லஞ்சம் பெற்றதாக தெரிய வந்துள்ளது. எனவே இந்த ஊழல் வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    கைதான 5 பேரிடமும் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் விசாரணை நடத்த அவகாசம் உள்ளது. இந்த 2 நாளில் மேலும் தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் பெற்று விடுவார்கள் என்று தெரிகிறது.

    குட்கா பங்குதாரர்கள் 3 பேரும் அரசு தரப்பு சாட்சிகளாக மாறி விட்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் கொடுக்கும் வாக்கு மூலங்களும், ஆதாரங்களும் லஞ்சம் பெற்றவர்களுக்கு மாபெரும் இடியாக மாறும் என்று சி.பி.ஐ. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    இதற்கிடையே சி.பி.ஐ. அதிகாரிகளின் மற்றொரு குழு, குட்கா ஊழலில் தொடர்புடையவர்களாக கருதப்படுபவர்களுக்கு சம்மன் அனுப்பி, நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதன்படி நேற்று 6 பேர் சம்மன் அனுப்பி வரவழைக்கப்பட்டிருந்தனர்.

    அந்த 6 பேரில் 4 பேர் குட்கா பங்குதாரர் மாதவராவ் அலுவலகத்தில் பணியாற்றி வருபவர்கள். மற்ற 2 பேர் மாதவராவின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில் சிலர் புரோக்கர்களாக செயல்பட்டவர்கள் என்று தெரிகிறது.

    தடை செய்யப்பட்ட குட்காவை தங்குதடையின்றி விற்பதற்கு ஒவ்வொரு துறை அதிகாரிகளுக்கும் இவர்கள் மூலம்தான் லஞ்சம் கை மாறியதாக சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இதை உறுதிப்படுத்த, டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள், அவர்கள் 6 பேரையும் தனி, தனி அறைகளில் வைத்து விசாரித்தனர்.

    நேற்று காலை தொடங்கி மாலை வரை இடைவெளி இல்லாமல் பல மணி நேரத்துக்கு இந்த விசாரணை நீடித்தது. அப்போது 6 பேரும் கொடுத்த தகவல்கள் அனைத்தும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டன.

    இன்று வேறு சிலர் நுங்கம்பாக்கம் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த விசாரணைகள் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கும் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான பிடி இறுகி வருகிறது.


    குட்கா ஊழல் வழக்கை பொறுத்தவரை லஞ்சம் கொடுத்தது யார்? என்பது தெரிந்து விட்டது. லஞ்சம் கொடுத்ததை அவர்கள் ஒத்துக்கொண்டனர். அந்த லஞ்ச பணம் புரோக்கர்கள் மூலம் கைமாறி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. அந்த புரோக்கர்களும் சி.பி.ஐ. வளையத்துக்குள் வந்து விட்டனர்.

    அடுத்து லஞ்ச பணத்தை வாங்கியது யார்-யார் என்பது மட்டுமே உறுதி செய்யப்பட வேண்டியதுள்ளது. எனவே டைரியில் உள்ள தகவல்களின் அடிப்படையில் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி போலீஸ் அதிகாரிகள் மன்னர் மன்னன், சம்பத் ஆகிய இருவருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். மன்னர்மன்னன் புழல் உதவி கமி‌ஷனராக இருந்தவர். தற்போது மன்னர்மன்னன் மதுரையில் ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.

    குட்கா ஊழலில் இவர் பெயர் கூறப்பட்டதை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி இவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி ஆதாரங்களை கைப்பற்றி இருந்தனர். அதன் அடிப்படையில் மன்னர்மன்னனுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    சம்மன் அனுப்பப்பட்டுள்ள மற்றொரு போலீஸ் அதிகாரியான சம்பத் செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். தற்போது தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    குட்கா ஊழலில் இவர் பெயரும் அடிபட்டதை தொடர்ந்து ஆறுமுகநேரியில் உள்ள அவரது வீட்டில் சி.பி.ஐ. கடந்த 5-ந்தேதி சோதனை நடத்தி இருந்தது. அடுத்தக்கட்டமாக அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    மன்னர்மன்னன், சம்பத் இருவரிடமும் விசாரணை நடந்த பிறகு உயர் போலீஸ் அதிகாரிகளை நோக்கி சி.பி.ஐ.யின் பார்வை திரும்பும் என்றும் கூறப்படுகிறது.

    சி.பி.ஐ.யின் இந்த அதிரடிக்கு இடையே 2 மற்றும் 3-ம் நிலையில் உள்ள காவல் துறை, சுகாதார துறை ஊழியர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் குறி வைத்து காய்களை நகர்த்தி வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் அந்த அதிகாரிகளும் விசாரிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

    அவர்கள் கொடுக்கும் தகவல்களையும் வைத்துக் கொண்டு உயர் போலீஸ் அதிகாரிகளை சுற்றி வளைக்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. எனவே குட்கா ஊழலில் அடுத்தடுத்து பூகம்பம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GutkhaScam #CBI
    ×